திருத்தந்தை பிரான்சிஸ்: போர் மனிதகுலத்திற்கு ஒரு தோல்வி

அன்னையின் பரிந்துரையின் வழியாக, அமைதிக்கான கொடையை அருளுமாறு செபிக்க விசுவாசிகளுக்கும், உலக ஆயர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

மார்ச் 23, இப்புதனன்று,  வத்திக்கானின் புனித திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு,   ‘போர் என்பது மனித குலத்திற்கு மிகப்பெரும் தோல்வி’ என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

மீண்டும் உக்ரைன் போரின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பும் விதமாக, மார்ச் 25, வெள்ளியன்று நடைபெறும் திருச்சடங்கில், அன்னையின் பரிந்துரையின் வழியாக, அமைதிக்கான கொடையை அருளுமாறு இறைவேண்டலில் ஈடுபட விசுவாசிகளுக்கும், உலகெங்கிலும் உள்ள ஆயர்களுக்கும் மேலும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

‘ஒரு நிமிடம் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர விரும்புகிறேன்’, என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், தப்பிச்சென்றவர்கள், கொல்லப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள், இருதரப்பிலும் வீழ்ந்து மடிந்த படைவீரர்கள் ஆகியோரைப் பற்றிய எல்லாச் செய்திகளும் நமக்கு மரணச் செய்திகளாக அமைந்துள்ளன என்று தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.

“இந்தப் போரின் மரணத்திலிருந்து நம்மை விடுவிக்குமாறு வாழ்வின் ஆண்டவரிடம் வேண்டுவோம் என்றும், இந்தப் போர் மனிதகுலத்திற்கு ஒரு தோல்வி என்பதை நமக்குப் புரியவைக்க ஆண்டவர் தன்னுடை ஆவியை அனுப்புமாறும் இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை.

போரில் ஈடுபடுவது என்பது நம்மையே நாம் அழித்துக்கொள்வதற்குச் சமம் என்றும், துணையாளராம் தூய ஆவி இவ்வுண்மையை நமக்குப் புரியவைக்கட்டும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சுய அழிவுக்கான தேவையிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் இறைவேண்டல் எழுப்பினார்.

ஆயுதங்களை வாங்குவதும் அவற்றைத் தயாரிப்பதும் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்பதை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் இறைவேண்டல் செய்வோம் என்றும், அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படுவதும், திருவிவிலியம் கூறுவது போல் ஆயுதங்களை அமைதிக்கான கருவிகளாக மாற்றுவதும்தான் தீர்வு என்றும், இதற்காக அமைதியின் அரசியாம் அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்வோம் என்றும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *