பொதுக்காலம் 8ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

நீங்கள் அரச குருக்கள், தூய மக்கள், உங்கள் அழைப்புக்கேற்ப ஒழுகுங்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 2-5, 9-12

அன்பிற்குரியவர்களே,

புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாய் இருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்.

உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக!

ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. முன்பு நீங்கள் ஒரு மக்களினமாய் இருக்கவில்லை; இப்பொழுது கடவுளுடைய மக்களாக இருக்கிறீர்கள். முன்பு இரக்கம் பெறாதவர்களாய் இருந்தீர்கள்; இப்பொழுதோ இரக்கம் பெற்றுள்ளீர்கள்.

அன்பிற்குரியவர்களே, நீங்கள் அன்னியரும் தற்காலக் குடிகளுமாய் இருப்பதால், ஆன்மாவை எதிர்த்துப் போர் புரியும் ஊனியல்பின் இச்சைகளை விட்டுவிடும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன். பிற இனத்தினர் நடுவில் நன்னடத்தை உடையவராய் இருங்கள். அவர்கள் உங்களைத் தீயவர்கள் என்று பழித்துரைப்பினும், உங்கள் நற்செயல்களைக் கண்டு, கடவுள் சந்திக்க வரும் நாளில் அவரைப் போற்றிப் புகழ்வார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 2b) 

பல்லவி: மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்!1அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!2ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! – பல்லவி

3ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! – பல்லவி

4நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! – பல்லவி

5ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியோவா 8: 12

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52

அக்காலத்தில்

இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.

இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.