மூவொரு கடவுள்

பெருவிழா

முதல் வாசகம்

மேலே விண்ணிலும், கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள்முதல், வானத்தின் ஒரு முனைமுதல் மறு முனைவரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்ததுண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டது உண்டா? நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர் வாழ்ந்தது போல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக் கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?

‘மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்’ என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 33: 4-5. 6,9. 18-19. 20,22 (பல்லவி: 12b) 

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. – பல்லவி

6ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான் கோள்கள் எல்லாம் உருவாயின.9அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது. – பல்லவி

18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். – பல்லவி

20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! – பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 14-17

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிதிவெ 1: 8 காண்க 

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20

அக்காலத்தில்

பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.