தவக்காலம் 2ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a

என் தலைவரே! நீர் மாட்சிமிக்க அஞ்சுதற்குரிய இறைவன். உம்மீது அன்புகொண்டு உம் கட்டளைகளின்படி நடப்பவர்களுடன் நீர் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காத்து அவர்களுக்குப் பேரன்பு காட்டுகின்றீர்! நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம். எங்களுடைய அரசர்கள், தலைவர்கள், தந்தையர்கள், நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இறைவாக்கினர்களாகிய உம் ஊழியர்கள் உமது பெயரால் பேசியதற்கு நாங்கள் செவிகொடுக்கவில்லை. 

என் தலைவரே! நீதி உமக்கு உரியது; எமக்கோ இன்று வரை கிடைத்துள்ளது அவமானமே. ஏனெனில், யூதாவின் ஆண்களும் எருசலேம்வாழ் மக்களும், இஸ்ரயேலைச் சார்ந்த யாவரும் ஆகிய நாங்கள், உமக்கு எதிராகச் செய்த துரோகத்தின் பொருட்டு, அருகிலோ தொலையிலோ உள்ள எல்லா நாடுகளுக்கும் உம்மால் இன்றுவரை விரட்டப்பட்டுள்ளோம். 

ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் மூலம் தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். நாங்களோ அவரது குரலொலியை ஏற்கவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 79: 8. 9. 11. 13 (பல்லவி: திபா 103:10a) 

பல்லவி: ஆண்டவரே, எம் பாவங்களுக்கு ஏற்றபடி எம்மை நடத்தாதேயும்.8எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்! உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம். – பல்லவி

9எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்; உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்; எங்கள் பாவங்களை மன்னித்தருளும். – பல்லவி

11சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக! கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக. – பல்லவி

13அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்! தலைமுறை தோறும் உமது புகழை எடுத்துரைப்போம். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்யோவா 6: 63b, 68b

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன; நிலைவாழ்வும் அளிக்கின்றன.

நற்செய்தி வாசகம்

மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 36-38

அக்காலத்தில் 

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். 

கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.