தவக்காலம் 2ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18

அந்நாள்களில் 

கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப் பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார். 

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். 

அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ‘ஆபிரகாம்! ஆபிரகாம்’ என்று கூப்பிட, அவர் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். 

ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 116: 10,15. 16-17. 18-19 (பல்லவி: 9) 

பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.10‘மிகவும் துன்புறுகிறேன்!’ என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. – பல்லவி

16ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர்.17நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். – பல்லவி

18இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;19உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34

சகோதரர் சகோதரிகளே, 

கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே. அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்மாற் 9: 7

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”

நற்செய்தி வாசகம்

என் அன்பார்ந்த மைந்தர் இவரே.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10

அக்காலத்தில்

இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.

அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது அவர், “மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ‘இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.