தவக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

அந்நாள்களில் 

எரேமியா கூறியது: ‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக்கொள்கின்றார்கள்; ‘பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்!’ என்கிறார்கள். 

ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். 

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 18: 1-2a,3. 4-5. 6 (பல்லவி: 6a) 

பல்லவி: என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்.1அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.2aஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்;3போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். – பல்லவி

4சாவின் கயிறுகள் என்னை இறுக்கின; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.5பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. – பல்லவி

6என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்யோவா 6: 63b, 68b

ஆண்டவரே, நீர் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வும் அளிக்கின்றன.

நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42

அக்காலத்தில் 

இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள். 

இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார். இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.