தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9

அந்நாள்களில் 

ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: “உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். இனி உன் பெயர் ஆபிராம் அன்று; ‘ஆபிரகாம்’ என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். 

இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார். 

மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 105: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8a) 

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.4ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!5அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். – பல்லவி

6அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!7அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. – பல்லவி

8அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.9ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். – பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்திபா 95: 8b, 7b

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள். மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.

நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59

அக்காலத்தில் 

இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். 

யூதர்கள் அவரிடம், “நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்றார்கள். 

இயேசு மறுமொழியாக, “நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்” என்றார். 

யூதர்கள் இயேசுவை நோக்கி, “உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.