பாஸ்கா 4ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

இயேசுவினாலே அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 8-12

அந்நாள்களில் 

பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு கூறியது: “மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல்நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, ‘கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.’ இவராலே அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 (பல்லவி: 22) 

பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

அல்லது: அல்லேலூயா.1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!9உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! – பல்லவி

21என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! – பல்லவி

26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.28என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. – பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2

அன்பிற்குரியவர்களே, 

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியோவா 10: 15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 11-18

அக்காலத்தில் 

இயேசு கூறியது: “நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல. ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றிக் கவலை இல்லை. 

நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்ல வேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். 

என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.