பொதுக்காலம் 7ஆம் வாரம் – திங்கள்

இன்றைய வாசகங்கள் தூய கன்னி மரியா, திரு அவையின் அன்னைநினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.

“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.

அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

இயேசுவின் தாய் மரியாவோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 12-14

இயேசு விண்ணேற்றம் அடைந்த பின் திருத்தூதர்கள் ஒலிவ மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3) 

பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.1நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.2யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.3கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. – பல்லவி

4எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.5‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். – பல்லவி

6மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.7ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இவரே உம் மகன்! இவரே உம் தாய்!

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.