பொதுக்காலம் 2ஆம் வாரம் – புதன்

முதல் வாசகம்

தாவீது கவணும் கல்லும் கொண்டு, பெலிஸ்தியனை வீழ்த்தினார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50

அந்நாள்களில் 

தாவீது சவுலை நோக்கி, “இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது; நீயோ இளைஞன், ஆனால் அவனோ தன் இள வயதுமுதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றார். 

மேலும் தாவீது, “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “சென்றுவா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார். 

தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார்; நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார்; தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார். 

தன் கேடயம் ஏந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றமும் உடைய இளைஞனாய் இருந்தான். அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, “நீ கோலுடன் என்னிடம் வர, நான் என்ன நாயா?” என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான். மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, “அருகே வா! வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்” என்றான். 

அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார். 

பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில், தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்;அதைக் கவணில் வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்தக் கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான். 

இவ்வாறு தாவீது, கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன்மீது வெற்றிகொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 144: 1. 2. 9-10 (பல்லவி: 1a) 

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!1என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! – பல்லவி

2என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! – பல்லவி

9இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.10அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிமத் 4: 23b

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா?

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். 

இயேசு கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். பின்பு அவர்களிடம், “ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. 

உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.