பாஸ்கா 3ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம்

ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-15

அந்நாள்களில் 

ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தை களையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. 

பின்பு அவர்கள், “இவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்று கூறச் சிலரைத் தூண்டிவிட்டனர். அவ்வாறே அவர்கள் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தார்கள். உடனே அவர்கள் எழுந்துவந்து அவரைப் பிடித்துத் தலைமைச் சங்கத்துக்கு இழுத்துச் சென்றார்கள்; மேலும் பொய்ச் சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள், “இந்த மனிதன் இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்” என்று கூறினார்கள். மேலும் அவர்கள், “நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்றும், மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்றும் இவன் கூறக் கேட்டோம்” என்றார்கள். தலைமைச் சங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவரை உற்றுப்பார்த்தபோது அவரது முகம் வானதூதரின் முகம்போல் இருக்கக் கண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 119: 23-24. 26-27. 29-30 (பல்லவி: 1b) 

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.

அல்லது: அல்லேலூயா.23தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.24ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர். – பல்லவி

26என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.27உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன். – பல்லவி

29பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.30உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிமத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள். 

இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். 

இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.