பாஸ்கா 6ஆம் வாரம் – செவ்வாய்

முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 22-34

அந்நாள்களில் 

பிலிப்பி நகர் மக்கள் திரண்டெழுந்து, பவுலையும் சீலாவையும் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள். அவர்களை நன்கு அடித்துச் சிறையில் தள்ளிக் கருத்தாய்க் காவல் செய்யுமாறு சிறைக் காவலர் ஒருவருக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு கட்டளை பெற்ற அவர் அவர்களை உட்சிறையில் தள்ளி, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டிவைத்தார். 

நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டினர். மற்றக் கைதிகளோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக் கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத்தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுந்தன. சிறைக் காவலர் விழித்தெழுந்து, சிறைக் கூடத்தின் கதவுகள் திறந்திருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப்பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, “நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றார். 

சிறைக் காவலர் உடனே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொல்லி, விரைந்தோடி வந்து, நடுங்கியவாறே பவுல், சீலா ஆகியோரின் காலில் விழுந்தார். அவர்களை வெளியே அழைத்து வந்து, “பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார்கள். 

பின்பு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள். அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர் அவர்களைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 138: 1-2a. 2bc-3. 7c-8 (பல்லவி: 7c) 

பல்லவி: ஆண்டவரே, உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.

அல்லது: அல்லேலூயா.1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.2aஉம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். – பல்லவி

2bcஉம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். – பல்லவி

7cஉமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியோவா 16: 7, 13

அல்லேலூயா, அல்லேலூயா! துணையாளரை உங்களிடம் அனுப்புவேன். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நான் போகாவிட்டால், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 5-11

அக்காலத்தில் 

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இப்போது என்னை அனுப்பியவரிடம் போகிறேன்; ஆனால் உங்களுள் எவரும் ‘நீர் எங்கே போகிறீர்?’ என்று என்னிடம் கேட்காமலேயே நான் சொன்னவற்றைக் குறித்துத் துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள். நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். 

அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். பாவம் பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் என்னிடம் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நீதி பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் நான் தந்தையிடம் செல்கிறேன்; நீங்களும் இனி என்னைக் காணமாட்டீர்கள். தீர்ப்பு பற்றிய அவர்கள் கருத்து தவறானது; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் தண்டனை பெற்றுவிட்டான்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.