பாஸ்கா 2ஆம் வாரம் – ஞாயிறு

முதல் வாசகம்

ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-35

அந்நாள்களில் 

நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். 

தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 118: 2-4. 16ab-18. 22-24 (பல்லவி: 1) 

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!2‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!3‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!4‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! – பல்லவி

16abஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்.18கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. – பல்லவி

22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். – பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

அன்பார்ந்தவர்களே, 

இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். நாம் கடவுள்மீது அன்பு கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. 

ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. 

இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

எட்டு நாள்களுக்குப் பின் இயேசு சீடர்களுக்குத் தோன்றினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார். 

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். 

எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். 

தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். 

வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.