பொதுக்காலம் 13ஆம் வாரம் – வெள்ளி

முதல் வாசகம்

உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-6, 9-12

வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக் கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?

தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன். உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்; எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவது போல நீங்களும் புலம்புமாறு செய்வேன்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும்.”

தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: “இதோ! நாள்கள் வரப் போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது. ஒரு கடல் முதல் மறு கடல் வரை, வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடைய மாட்டார்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 119: 2,10. 20,30. 40,131 (பல்லவி: மத் 4: 4) 

பல்லவி: மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்.2அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.10முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். – பல்லவி

20எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.30உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். – பல்லவி

40உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும்.131வாயை ‘ஆ’வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிமத் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.

இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.