பாஸ்கா எண்கிழமை – வியாழன்

பெருவிழா

முதல் வாசகம்

வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 11-26

கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக்கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்றுச் சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒருசேர ஓடிவந்தனர். பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: “எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்து விட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.

அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள். அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம்வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக் குறித்துக் கூறியிருந்தார்.

மோசேயும், ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்’ என்று கூறியுள்ளார்.

சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர். அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், ‘உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்’ என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்களே. ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீய செயல்களை விட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 8: 1a,4. 5-6. 7-8 (பல்லவி: 1ab) 

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!1aஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!4மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? – பல்லவி

5ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.6உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படிச் செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். – பல்லவி

7ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,8வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிதிபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48

அக்காலத்தில் 

சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். 

சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ‘‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ‘‘நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 

அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ‘‘உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். 

பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ‘‘மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், ‘‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.