பாஸ்கா 5ஆம் வாரம் – புதன்

நற்செய்தி வாசகம் தொழிலாளரான புனித யோசேப்பு நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6

அந்நாள்களில் 

யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது” என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். 

அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பிவைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர், சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். 

ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, “அவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்; மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்” என்று கூறினர். இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1) 

பல்லவி: அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

அல்லது: அல்லேலூயா.1“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்”, என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.2எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். – பல்லவி

4ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.5அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிதிபா 68: 19

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இவர் தச்சருடைய மகன் அல்லவா?

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.