பொதுக்காலம் 4ஆம் வாரம் – வியாழன்

முதல் வாசகம்

உலகப் போக்குப்படி நானும் சாகப்போகிறேன். சாலமோனே! நீ நெஞ்சுறுதியுடன் இரு.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 2: 1-4, 10-12

தாவீதின் இறுதி நாள் நெருங்கினபோது அவர் தம் மகன் சாலமோனுக்குப் பணித்துக் கூறியது இதுவே: “அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண்டவனாய் இரு. உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்பிடி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்டநூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி. இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய். ஏனெனில் ஆண்டவர் என்னை நோக்கி, ‘உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களானால், இஸ்ரயேலின் அரியணையில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதில்லை’ என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்திருக்கும்.”

பின்னர் தாவீது தம் மூதாதையருடன் துயில் கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார். சாலமோன் தம் தந்தை தாவீதின் அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்1 குறி 29: 10b. 11ab. 11cd-12a. 12bcd (பல்லவி: 12b) 

பல்லவி: ஆண்டவரே, அனைத்தையும் ஆள்பவர் நீரே.10bஎங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக! – பல்லவி

11abஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. – பல்லவி

11cdஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர்.12aசெல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. – பல்லவி

12bcdநீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம் கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிமாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இயேசு பன்னிருவரையும் அனுப்பினார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அக்காலத்தில்

இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.

மேலும், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மேலும் அவர், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று அவர்களுக்குக் கூறினார்.

அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாறவேண்டும் என்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.