பாஸ்கா எண்கிழமை – திங்கள்

பெருவிழா

முதல் வாசகம்

கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்:

‘‘யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். 

இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. 

தாவீது அவரைக் குறித்துக் கூறியது: ‘நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.’ 

சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, ‘அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்’ என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.“

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 16: 1-2. 5,7-8. 9-10. 11 (பல்லவி: 1) 

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.2நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்’ என்று சொன்னேன். – பல்லவி

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். – பல்லவி

9என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.10ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். – பல்லவி

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலிதிபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 8-15

அக்காலத்தில்

கல்லறையில் இயேசுவைக் காணவந்த பெண்கள் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரைஅணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து, அப்படைவீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, “ ‘நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உடலைத் திருடிச் சென்றுவிட்டனர்’ எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்” என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

By admin

Leave a Reply

Your email address will not be published.